ராகுல், பூரன் அரைசதம்: மும்பை அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த லக்னோ

லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்கள் அடித்தார்.

Update: 2024-05-17 16:05 GMT

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. லக்னோவின் தொடக்க ஆட்டக்காரரான படிக்கல் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 28 ரன்களிலும், ஹூடா 11 ரன்களிலும் சாவ்லா சுழலில் சிக்கினர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ராகுல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் 4-வது விக்கெட்டுக்கு கை கோர்த்த நிக்கோலஸ் பூரன் வந்த முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடினார். மும்பை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய பூரன் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த கே.எல். ராகுலும் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அரைசதம் அடித்த பிறகும் தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய பூரன் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அர்ஷத் கான் டக் அவுட்டிலும், கே.எல். ராகுல் 55 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் பதோனி 22 ரன்களும் (10 பந்துகள்), குருனால் பாண்ட்யா 12 ரன்களும் (7 பந்துகள்) அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் லக்னோ 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக நுவான் துஷாரா மற்றும் சாவ்லா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை பேட்டிங் செய்ய உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்