உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வாக உள்ளார் அவருக்கு ஓய்வு கொடுங்கள் - ஆர்.சி.பி-க்கு அறிவுரை வழங்கிய ஹர்பஜன் சிங்

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-12 10:00 GMT

Image Courtesy: AFP 

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு நிர்ணயித்த 197 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 199 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் ஆர்.சி.பி அணி இதுவரை 6 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி மட்டும் பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டம் மட்டுமின்றி பெங்களூரு தோல்வி அடைந்த அனைத்து ஆட்டங்களையும் பார்த்தால் அந்த அணியின் பந்துவீச்சு சிறப்பானதாக இல்லை. சிராஜ், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப், ரீஸ் டாப்லி, வைஷாக் விஜய்குமார், கரண் சர்மா ஆகியோர் ரன்களை வாரி வழங்கி உள்ளனர்.

அதிலும் குறிப்பாக நட்சத்திர பந்துவீச்சாளரான முகமது சிராஜ் இந்த தொடரில் இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் சிராஜ் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வாக உள்ளதாகவும், அவருக்கு 2 ஆட்டங்கள் ஓய்வு அளிக்க வேண்டும் எனவும் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நான் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தால், நான் அவருக்கு 2 போட்டிகளில் ஓய்வு கொடுப்பேன். அவர் திரும்பிச் சென்று அவருக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்கட்டும். டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் கிரிக்கெட் அல்லது இந்த வடிவத்தில் கூட புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதை நாம் பார்த்த அதே சிராஜ் தான்.

அவர் டீம் இந்தியாவிற்கும், ஆர்.சி.பி-க்கும் கூட சாம்பியன் பந்துவீச்சாளராக இருந்துள்ளார். அவர் செய்ய வேண்டியதை  செய்யவில்லை என்று நான் உணர்கிறேன். அவர் மிகவும் சோர்வாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல நிலையில் இல்லை. அவர் ஓய்வு எடுக்க வேண்டும். அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அவர் நிறைய ஓவர்கள் வீசுகிறார்.

அவர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் சோர்வாகத் தெரிகிறார். இந்த மாதிரியான ஆட்டத்திற்கு பின்(மும்பைக்கு எதிராக) எந்த ஒரு பந்து வீச்சாளரும் அடுத்த நாள் எழுந்து நன்றாக உணருவது கடினம். இதுபோன்ற சூழ்நிலைகளை நான் கடந்துவிட்டேன். நீங்கள் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும், உங்கள் விளையாட்டைப் பற்றி சிந்தித்து சிறிது ஓய்வெடுக்க வேண்டும். சிராஜ் வலுவாக மீண்டும் வருவார் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்