சால்ட் அரைசதம்....டெல்லியை வீழ்த்தி 6வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சால்ட் 68 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 47வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்று முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி கொல்கத்தா வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களம் இறங்கினர்.
இருவரும் தொடக்கம் முதலே டெல்லி அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இதில் அதிரடியாக ஆடிய சால்ட் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் 15 ரன் எடுத்த நிலையில் சுனில் நரேன் அவுட் ஆனார்.
இதையடுத்து களம் இறங்கிய ரிங்கு சிங் 11 ரன்னிலும், அரைசதம் அடித்து அசத்திய சால்ட் 68 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெல்லிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் கொல்கத்தா தனது 6வது வெற்றியை பதிவு செய்தது.கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சால்ட் 68 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.