இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்றாகும் - அபிஷேக் சர்மா

ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்றாகும் என அபிஷேக் சர்மா கூறியுள்ளார்.

Update: 2024-05-25 01:18 GMT

Image Courtesy: AFP

சென்னை,

சென்னையில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 50 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி ஐதராபாத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 36 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ராஜஸ்தான் தரப்பில் துருவ் ஜூரெல் 56 ரன் எடுத்து களத்தில் இருந்தார். ஐதராபாத் தரப்பில் ஷபாஸ் அகமது 3 விக்கெட், அபிஷேக் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினர். ஐதராபாத் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஷபாஸ் அகமதுவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் அபிஷேக் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது,

உண்மையை சொல்ல வேண்டுமெனில் முழுமையாக நான் 4 ஓவர்களை வீசுவது இந்தப் போட்டியாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு நான் தயாராக இருந்தேன். என்னுடைய பந்து வீச்சில் நான் வேலை செய்தேன். கடந்த 2 வருடங்களாக நான் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டேன். எனவே பந்து வீச்சில் நான் எனது வேலையை செய்ய வேண்டியிருந்தது. அதை நான் என்னுடைய தந்தையுடன் இணைந்து செய்தேன்.

நாங்கள் பேட்டிங் செய்த போது பிட்ச் வேகமாக இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அது சுழல துவங்கியது. கம்மின்ஸ் ஸ்பின்னர்களை சிறப்பாக பயன்படுத்தினார். அவர் எனக்கு இன்று பவுலிங் கொடுத்ததும், பயிற்சியில் செய்த அனைத்தையும் களத்தில் செயல்படுத்த நினைத்தது அழுத்தத்தை கொடுத்தது. சையீத் முஷ்டாக் அலி கோப்பையை நாங்கள் பஞ்சாப் அணிக்காக வென்றோம்.

அங்கிருந்தே பந்து வீச்சில் அசத்த வேண்டுமென்ற வேகம் எனக்குள் வந்தது. அதற்காக நான் கடினமாக வேலை செய்தேன். எங்களுடைய மெசேஜ் மிகவும் எளிது. எங்களுடைய அணி நிர்வாகம் சுதந்திரமாக விளையாடுவதற்கான அனுமதியை கொடுத்தனர். ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்றாகும். அது நிறைவேறி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்