டிராவுக்காக விளையாடுவதில் விருப்பம் இல்லை - ஸ்டோக்ஸ்

டிராவுக்காக விளையாடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. மற்ற வீரர்களின் மனநிலையும் இது தான் என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

Update: 2022-12-06 02:56 GMT

Image Courtesy: AFP 

ராவல்பிண்டி,

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 657 ரன்களும், பாகிஸ்தான் 579 ரன்களும் குவித்தன. அடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் அதிரடி காட்டிய இங்கிலாந்து 35.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்களுடன் துணிச்சலாக 'டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 343 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது.இந்த நிலையில் மேற்கொண்டு 263 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று பாகிஸ்தான் தொடர்ந்து பேட்டிங் செய்தது. 4-வது விக்கெட்டுக்கு சாத் ஷகீலும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் கைகோர்த்து பாகிஸ்தானுக்கு ஓரளவு வலு சேர்த்தனர்.

பொறுமையாக ஆடிய ரிஸ்வான் (46 ரன்), சாத் ஷகீலை (76 ரன், 159 பந்து) ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை பாறிகொடுத்தனர்.

தேனீர் இடைவேளைக்கு பிந்தைய பகுதியில் 41 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 86 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் பரபரப்பு எகிறியது.

ஆனால் அஹா சல்மான் (30 ரன்), அசார் அலி (40 ரன்) ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் அடுத்தடுத்து வெளியேற்றி எதிரணியின் நம்பிக்கையை சீர்குலைத்தார். இதையடுத்து கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் அணியை தோல்வியின் பிடியில் இருந்து காப்பாற்ற தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். ஜாகித் மமூத் (1 ரன்), ஹாரிஸ் ரவுப் (0), 10-வது விக்கெட்டுக்கு நசீம் ஷாவும், முகமது அலியும் இணைந்து எஞ்சிய நேரத்தை கடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆட்ட நேரம் நெருங்கிய தருவாயில் விக்கெட்டை பறிகொடுத்த நசீம் ஷா (6 ரன், 46 பந்து), ஜாக் லீச்சின் சுழற்பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. முடிவில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 96.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதன் பின்னர் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பேசுகையில்,

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், 'உற்சாகமும், பரவசமும் நிறைந்த டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்ற தாரக மந்திரத்துடன் தான் இங்கு வந்தோம். டிராவுக்காக விளையாடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. மற்ற வீரர்களின் மனநிலையும் இது தான். அதிர்ஷ்டவசமாக இன்று (நேற்று) பந்து நன்கு 'ரிவர்ஸ்விங்' ஆனது. ஆண்டர்சனும், ராபின்சனும் அற்புதமாக பந்து வீசினர். ஏறக்குறைய ஆட்ட நேரம் முடிவடைய 8 நிமிடங்கள் இருந்த போது வெற்றியை வசப்படுத்தி இருக்கிறோம். வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்தின் சிறந்த வெற்றிகளில் இதுவும் ஒன்று' என்றார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், 'வெற்றி பெறுவதற்கு 2-வது இன்னிங்சில் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். வலுவான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. பிட்ச் பராமரிப்பாளரிடம், பிட்ச்சை தயார்படுத்துவதில் சில யோசனைகளை கூறினேன். ஆனால் நாங்கள் விரும்பிய மாதிரியான பிட்ச் கிடைக்கவில்லை. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும் என்று விரும்பினோம்' என்று குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்