ராகுல், பண்ட் அல்ல...ரோகித்துக்கு பின் அவர்தான் இந்திய அணியின் கேப்டன் - முன்னாள் வீரர் அதிரடி கருத்து
ரோகித்துக்கு பின் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்? என்பது குறித்து நவ்ஜோத் சித்து கருத்து தெரிவித்துள்ளளார்.
மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா இந்த சீசனுக்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரோகித் சர்மாவின் ரசிகர்கள், ஒவ்வொரு போட்டியிலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் மும்பை அணியை போலவே வருங்காலத்தில் இந்திய அணியிலும் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து அதிரடியாக கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஹர்திக் பாண்ட்யாதான் வருங்காலம். ரோகித் சர்மா தற்போது 36 - 37 வயதை கடந்து விட்டார். அவரிடம் விளையாடுவதற்கு இன்னும் சில வருடங்கள்தான் இருக்கின்றன. அவர் சூப்பர் கேப்டன் மற்றும் அற்புதமான வீரர். அவரின் ஆட்டத்தை பார்க்கும் போதெல்லாம் நேரம் நின்று விடுவதுபோல் இருக்கும். ஆனால் உண்மையில் வருங்காலத்தை எதிர்நோக்கி யாரோ ஒருவர் புதிதாக பொறுப்பேற்க தயாராக இருக்க வேண்டும்.
"ஹர்திக் பாண்ட்யாவை நான் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பரிந்துரைக்க மாட்டேன். ஆனால் ரோகித் சர்மா இல்லாதபோது அவர் இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டார். எனவே பாண்ட்யாதான் இயற்கையாகவே உங்களுடைய அடுத்த கேப்டனாக தேர்வாகி இருக்கிறார். அதனாலேயே பி.சி.சி.ஐ. அவரை துணை கேப்டனாக பெயரிட்டுள்ளது. பி.சி.சி.ஐ. இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக நிறைய திட்டங்களும் தேர்வுகளும் இருந்தன. அதன் முடிவில்தான் தற்போது ஹர்திக் பாண்ட்யா 50 ஓவர் மற்றும் டி20 அணியின் அடுத்த கேப்டனுக்கான வாய்ப்பில் இருக்கிறார்" என்று கூறினார்.