தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் தற்போது இந்தியாவில் இல்லை - சேவாக் அதிரடி
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சமீப காலமாக சுழற்பந்து வீச்சில் தடுமாற்றமாக செயல்பட்டு வருகின்றனர்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக இலங்கை மண்ணில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் டி20 தொடரில் வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து தோற்றது. அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது.
மேலும் சமீப காலமாகவே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகின்றனர். அதற்கு எடுத்துகாட்டாக 2017 புனே, 2023 இந்தூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா? என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களும் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிகமாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாததுமே இதற்கு காரணம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "இங்கே அதிகமான வெள்ளைப்பந்து போட்டிகள் நடைபெறுவதும் குறைவான ஸ்பின்னர்கள் வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். இந்திய வீரர்கள் குறைவான உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது மற்றொரு காரணமாகும். சர்வதேசத்தை விட உள்ளூரில் நீங்கள் அதிக ஸ்பின்னர்களை எதிர்கொள்வீர்கள். எங்கள் காலத்தில் டிராவிட், சச்சின், கங்குலி,லட்சுமன், யுவராஜ் போன்ற அனைவரும் நிறைய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவோம்.
அதனால் நாங்கள் ஸ்பின்னர்களை அதிகமாக எதிர்கொண்டு விளையாடுவோம். ஆனால் அட்டவணை பிசியாக இருப்பதால் வீரர்களுக்கு குறைந்த நேரமே கிடைக்கிறது. நிறைய லீக் தொடர்கள் நடைபெறுவதால் ஸ்பின்னர்கள் தங்களுடைய திறனை முன்னேற்றுவதில்லை" என்று கூறினார்.