இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி முன்னிலை: இன்று 4-வது நாள் ஆட்டம்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. டேரில் மிட்செல் சதம் அடித்தார்.

Update: 2023-03-11 20:51 GMT

கிறைஸ்ட்சர்ச்,

முதலாவது டெஸ்ட்

நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 355 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 40 ரன்னுடனும், மைக்கேல் பிரேஸ்வெல் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மைக்கேல் பிரேஸ்வெல் 25 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் டிம் சவுதி 25 ரன்னிலும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து மேட் ஹென்றி, டேரில் மிட்செலுடன் இணைந்தார். நிலைத்து நின்று அபாரமாக ஆடி 5-வது சதத்தை அடித்த டேரில் மிட்செல் (102 ரன், 193 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) லஹிரு குமரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

நியூசிலாந்து 373 ரன்கள்

முதலில் நிதானத்தை கடைபிடித்த மேட் ஹன்றி பிறகு அதிரடியாக ஆடி கசுன் ரஜிதா வீசிய ஒரு ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்ருடன் 24 ரன்கள் திரட்டியதுடன் அரைசதத்தையும் கடந்தார். அதிரடி காட்டிய மேட் ஹென்றி 72 ரன்னில் (75 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) அசிதா பெர்னாண்டோ பந்து வீச்சில் போல்டு ஆனார்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நியூசிலாந்து அணி 107.3 ஓவர்களில் 373 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 18 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், லஹிரு குமரா 3 விக்கெட்டும், கசுன் ரஜிதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 38 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது. கேப்டன் கருணாரத்னே 17 ரன்னிலும், ஒஷடா பெர்னாண்டோ 28 ரன்னிலும், குசல் மென்டிஸ் 14 ரன்னிலும் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து நடையை கட்டினர். இந்த 3 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னெர் கபளீகரம் செய்தார்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்