டி20 உலகக் கோப்பை: முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து

ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட் பொறுத்தே நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிவு செய்யப்படும் சூழ்நிலை இருந்தது.

Update: 2022-11-04 10:50 GMT

அடிலெய்டு,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்னும் 5 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் எந்த அணியும் அரைஇறுதியை எட்டாமல் இருந்தது.

சூப்பர் 12 சுற்றில் இன்று நடந்த முதல் போட்டியில் அயர்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இருந்தது. இதன் மூலம் அந்த அணி 7 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட உறுதி செய்து இருந்தது.

இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதில் ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட் பொறுத்தே நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிவு செய்யப்படும் சூழ்நிலை இருந்தது.

அதாவது ஆஸ்திரேலியா அணி தற்போது குரூப் ஏ பிரிவில் ஏற்கனவே 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அதே போல் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடன் ( ரன் ரேட் அடிப்படையில்) 2-வது இடத்தில் உள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று, நாளை இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் 3 அணிகளும் சூப்பர் 12 சுற்று முடிவில் 7 புள்ளிகள் பெறும் நிலை உள்ளது. ஆனால் நியூசிலாந்து அணியின் ரன் ரேட் ஆஸ்திரேலியா அணியை விட அதிகமாக உள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 168 ரன்கள் எடுத்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று 7 புள்ளிகளை பெற்றாலும், நியூசிலாந்து அணியை ரன் ரேட் அடிப்படையில் பின்னுக்கு தள்ள ஆஸ்திரேலியா இன்று 180 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வேண்டும். இது நடக்காததால் நியூசிலாந்து அணி தற்போது அதிகாரபூர்வமாக இந்த உலககோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்