அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேபாளம் மற்றும் ஓமன் அணிகள் தகுதி...!

2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.;

Update:2023-11-03 15:35 IST

image courtesy; AFP

காத்மாண்டு,

டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அந்த தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

இந்நிலையில் 9வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆசிய அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் அரையிறுதி சுற்றில் ஓமன் அணி பக்ரைனுடனும், நேபாளம்- ஐக்கிய அரபு அமீரக அணியுடனும் மோதின. இந்த ஆட்டங்களில் ஓமன் பத்து விக்கெட் வித்தியாசத்தில் பக்ரைனை வீழ்த்தியது மற்றும் நேபாளம் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் மோத உள்ளன. இருப்பினும் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்