இன்னும் உயர பறக்க வேண்டும் என்பதே என் ஆசை - அடுத்த இலக்கு குறித்து பேசிய தவான்

ஷிகர் தவான் தனது அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து பேசியிருக்கிறார்.

Update: 2024-08-24 14:56 GMT

image courtesy: PTI

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி 10 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.

இருப்பினும் 2019 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது காயமடைந்த அவர், குணமடைந்த பின் அதிரடியாக விளையாடத் தடுமாறினார். அதன் காரணமாக இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்ட அவருக்கு போட்டியாக தற்போது ஜெய்ஸ்வால் போன்ற பல இளம் கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளனர்.

அதனால் தற்போது வருங்காலத்தை கருத்தில் கொண்டு 38 வயதில் ஓய்வு பெறுவதாக தவான் அறிவித்துள்ளார். ஷிகர் தவான் ஐசிசி தொடர்களில் கில்லியாக செயல்பட்டு இந்திய அணியை காப்பாற்றியவர். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஷிகர் தவான் தனது அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து பேசியிருக்கிறார். அதில், "என்னுடைய பார்வையில் பணம் சம்பாதிக்க வேண்டும். நான் மட்டுமல்லாமல் என்னை சுற்றியிருப்பவர்களும் பொருள் ஈட்டும் வகையிலான தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். தொழில், சினிமா.. ஏன் அரசியலில் கூட ஈடுபட தயாராக இருக்கிறேன். வாழ்க்கையை அதன் வழியில் வாழ விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ, அதற்கு முழுமையாக ஒப்புக் கொள்வேன்.

அதேபோல் இனி என்ன செய்தாலும், நான் செய்த சாதனைகளுக்கு மேல் இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவுடன் இருக்கிறேன். என்னுடன் பணியாற்றும் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். ஏற்கனவே செய்யும் தொழில்கள் மூலமாக நன்றாக சம்பாதித்து வருகிறேன். அதேபோல் இனி வர்ணனையிலும் களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் புதிய விஷயங்களை முயன்று பார்க்க விருப்பம் உள்ளது. எனக்கு கீழே விழுவதை பற்றி கவலையில்லை. இன்னும் உயர பறக்க வேண்டும் என்பதே ஆசை" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்