எம்.எஸ். தோனியை உத்வேகமாக எடுத்துக்கொண்டு விராட் கோலி அசத்த வேண்டும் - முகமது கைப்
2011 ஒருநாள் உலகக்கோப்பையில் ஆரம்பம் முதலே தடுமாறிய தோனி பைனலில் 91 ரன்கள் அடித்து வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக முகமது கைப் தெரிவித்துள்ளார்.
மும்பை,
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் ஆன ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.
முன்னதாக நடப்பு தொடரில் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது.
இந்நிலையில் 2011 உலகக்கோப்பையில் ஆரம்பம் முதலே தடுமாறிய எம்.எஸ். தோனி பைனலில் 91 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக முகமது கைப் தெரிவித்துள்ளார். அதை விராட் கோலியும் உத்வேகமாக எடுத்துக்கொண்டு பைனலில் அசத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எம்எஸ் தோனி 2011 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடாவிட்டாலும் பைனலில் அசத்தியதை விராட் கோலி நினைவில் கொள்ள வேண்டும். அதுவே என்னுடைய சிறிய ஆலோசனை. அதிரடியாக விளையாடுவதில் சிறந்த வீரரான அவர் எந்த பவுலிங் அட்டாக்கையும் நொறுக்கக் கூடியவர். 2011 உலகக் கோப்பையில் மகேந்திர சிங் தோனி பார்மில் இல்லை. இருப்பினும் பைனலில் அவர் 91 ரன்கள் அடித்தார். குலசேகராவுக்கு எதிராக அவர் அடித்த வின்னிங் ஷாட் சிக்சர் இன்னும் அனைவரது மனதில் இருக்கிறது.
அந்த வகையில் இப்போட்டியில் விராட் கோலி ஹீரோவாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். நாம் சுமாரான பார்மில் இருக்கிறோம் என்பதை முதலில் அவர் மறக்க வேண்டும். ஏனெனில் 2023 உலகக்கோப்பையில் கொல்கத்தாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் சதமடித்தார். அன்றைய நாளில் அற்புதமாக விளையாடிய அவர் அதிரடியாக விளையாடவில்லை. மாறாக தரமான ஷாட்டுகளை அடித்தார்.
அதேபோல பைனலில் அடித்து நொறுக்க முயற்சிக்காமல் அவர் கிளாஸ் ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். பாண்டியா, ரோகித், சூர்யகுமார் ஆகியோர் வேகமாக விளையாட வேண்டும். ஆனால் விராட் கோலி முழுமையாக 20 ஓவர் விளையாட வேண்டும். எனவே 2011 தோனியை போல அவரும் ஹீரோவாக வர வாய்ப்புள்ளது" என்று கூறினார்.