சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்..! ரோகித் சர்மாவை வாழ்த்திய கிறிஸ் கெய்ல்
ரோகித் சர்மாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் ஹஷ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஜாய் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.ஹஷ்மதுல்லா ஷஹிதி 80 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்ஜாய் 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். தொடக்கம் முதல் ரோகித் அதிரடியாக ஆடினார். இஷான் கிஷன் மறுமுனையில் நிலைத்து ஆடினார் ,ரோகித் சர்மா பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அரைசதம் அடித்தார்.அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் .பின்னர் ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .அடுத்து களமிறங்கிய விராட் கோலி அரைசதம் அடித்தார்.
இதன் மூலம் இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்தார். இதனால் ரோகித் சர்மா சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் அதிக சிக்ஸர்கள் (556) அடித்த வீரர் என்ற சாதனை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் கெய்ல் (553 சிக்ஸர்கள்) 2வது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள ரோகித் சர்மாக்கு வாழ்த்துகள். 45 (ஜெர்சி) எண் சிறப்பானது .என தெரிவித்துள்ளார்.
Congrats, @ImRo45 - Most Sixes in International cricket. #45 Special pic.twitter.com/kmDlM1dIAj
— Chris Gayle (@henrygayle) October 11, 2023