கெய்க்வாட் சந்தித்த கடினமான காலகட்டம் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்த மைக் ஹஸ்சி

2020-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின்போது கெய்க்வாட் சந்தித்த கடினமான காலகட்டம் குறித்த சில முக்கிய தகவல்களை மைக் ஹஸ்சி பகிர்ந்துள்ளார்.

Update: 2024-04-13 04:56 GMT

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சி.எஸ்.கே. அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த எம்.எஸ். தோனி விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடி வருகிறார்.

சென்னை அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணியானது இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின்போது ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்த கடினமான காலகட்டம் குறித்த சில முக்கிய தகவல்களை தற்போது சி.எஸ்.கே. அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்சி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : "ருதுராஜ் கெய்க்வாட் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பதை நான் விரும்புகிறேன். முதல்முறையாக அவர் சி.எஸ்.கே. அணிக்கு வந்தபோதே அவரை பார்த்திருக்கிறேன். அப்போது இளம் வாலிபராக ஒல்லியான தேகத்துடன் இருந்தார். அதுமட்டும் இன்றி 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரானது துபாயில் நடைபெற்றபோது அவருக்கு கோவிட் வந்தது. அந்த நேரத்தில் 32 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

அதோடு தொடர்ச்சியாக அவருக்கு அடிக்கடி சோதனையையும் செய்யப்பட்டது. அந்த சோதனைகளில் பெரும்பாலும் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட்டே வந்ததால் மிகவும் சோர்ந்து போனார். அதன் பின்னர் 32 நாட்கள் கழித்துதான் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார். அந்த சமயத்தில் நான் அவரை வலைப்பயிற்சியில் பார்க்கும்போது அப்போதே அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

"இந்த பையனிடம் ஏதோ ஒன்று சிறப்பு இருக்கிறது" என்று நான் அப்போதே நினைத்தேன். அதன்பிறகு அந்த தொடரில் ஒரு சில போட்டிகளில் விளையாடிய அவர் அதிக ரன்கள் அடிக்காததால் மீண்டும் அணியிலிருந்து வெளியேறினார். ஆனாலும் விடாப்பிடியாக தனது பேட்டிங் பயிற்சியை தொடர்ச்சியாக மேற்கொண்டு தனது திறனை மேம்படுத்திக் கொண்டு அவர் மீண்டும் எங்கள் அணிக்காக தற்போது நட்சத்திர வீரராக விளையாடி வருவதை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த சில சீசன்களாகவே அவரது ஆட்டம் தனித்துவமான லெவலில் இருந்து வருகிறது. அவரிடம் இருந்த கேப்டன்சி திறனை கவனித்த தோனி அவரை கேப்டன் பொறுப்பிற்காக தயார் செய்து தற்போது கேப்டனாகவும் மாற்றி உள்ளார்"

Tags:    

மேலும் செய்திகள்