ஆண்கள் ஆர்.சி.பி. அணியினரை கலாய்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் ...பதிலடி கொடுத்த ரசிகர்கள்

பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு கோப்பையை வென்றது.

Update: 2024-03-18 09:08 GMT

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் (ஆர்.சி.பி), டெல்லி கேப்பிட்டல்சும் மோதின. இதில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

ஆர்.சி.பி. ஆண்கள் அணியினர் ஐ.பி.எல். தொடரில் 16 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கோப்பையை வெல்ல முடியாமல் உள்ளனர். ஆனால் பெண்கள் அணியினர் 2-வது ஆண்டிலேயே கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளனர்.

இந்நிலையில் பெண்கள் ஆர்.சி.பி. அணியினர் கோப்பை வென்றதை அடுத்து, ஆண்கள் ஆர்.சி.பி. அணியினரை கலாய்க்கும் வகையில் ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

அதில், சினிமாவில் வரும் காட்சி ஒன்றில் ஆண் ஒருவர் சிலிண்டரை தூக்க முடியாமல் தூக்கி வருவதை போலவும், அதனை பெண் ஒருவர் எளிதில் தூக்கிச்செல்வது போலவும் பதிவிட்டு வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்.சி.பி. ரசிகர்கள் கடந்த 2016 - 2017-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை குறிக்கும் வகையில் 'நன்றி' தெரிவித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்