பிளிஸ்சிஸ், மேக்ஸ்வெல் தொடர்ந்து ஆடி இருந்தால் 18-வது ஓவரிலேயே போட்டி முடிந்து இருக்கும் - டோனி கருத்து

பெங்களூரு அணியில் பிளிஸ்சிஸ், மேக்ஸ்வெல் தொடர்ந்து ஆடி இருந்தால் 18-வது ஓவரிலேயே எங்களை காலி செய்திருப்பார்கள் என்று சென்னை அணியின் கேப்டன் டோனி தெரிவித்தார்.

Update: 2023-04-18 23:47 GMT

பெங்களூரு,


ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

ஐ.பி.எல். வரலாற்றில் சென்னைக்கு எதிராக 147 ரன்களுக்கு மேலான இலக்கை ஒரு போதும் விரட்டிப்பிடித்ததில்லை என்ற மோசமான நிலையை மாற்றியமைக்க பெங்களூரு அணி எடுத்த முயற்சிக்கு இந்த முறையும் பலன் கிட்டவில்லை. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:-

பெங்களூரு என்றாலே பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளம் என்பது தெரியும். இரவில் பனிப்பொழிவு தாக்கம் அதிகம் இருக்கும். எனவே அந்த சூழ்நிலைக்கு தகுந்தபடி நமது திட்டத்தை மாற்றிக்கொண்டு விளையாட வேண்டியது அவசியமானதாகும். ஆடுகளம் முதலில் சற்று தொய்வாக இருந்தது. அதனை கடந்து ரன் அடிக்கும் வேகத்தை அதிகரிப்பது முக்கியம். முதலில் நிதானத்தை கடைப்பிடித்து விட்டு பிற்பாதியில் முடிந்த அளவுக்கு வேகமாக ஆடுவது என்று முடிவெடுத்து செயல்பட்டோம்.

ஷிவம் துபே பந்தை அதிரடியாக அடித்து ஆடும் ஆற்றல் கொண்டவர். அவருக்கு வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் பிரச்சினை உண்டு. ஆனால் சுழற்பந்து வீச்சை எளிதாக விளாசக்கூடியவர். அவருக்காக நாங்கள் சில திட்டங்களை வகுத்து வைத்து இருந்தோம். ஆனால் அவர் பயிற்சி முகாமுக்கு வந்ததும் காயம் அடைந்து விட்டதால் எங்களால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. அவரால் மிடில் ஓவர்களில் வேகமாக ரன்கள் எடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களை காட்டிலும் அவர் தன்னைத்தானே அதிகம் நம்ப வேண்டும். நாம் ஒரு அளவுக்கு தான் வீரர்களுக்கு வழிகாட்ட முடியும். களத்திற்குள் இறங்கி விட்டால் அவர்கள் தான் எல்லாவற்றையும் பார்த்து கொள்ள வேண்டும்.

220 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்து விட்டோம் என்றால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதிரடியாக ஆடுவார்கள் என்பது தெரிந்த விஷயமாகும். பிளிஸ்சிஸ், மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் நிலைத்து நின்று தொடர்ந்து விளையாடி இருந்தால் 18-வது ஓவருக்குள் போட்டியை வெற்றிகரமாக முடித்து இருப்பார்கள். நான் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டே ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கிறது என்பதை கவனித்து கொண்டே இருந்தேன். எப்போதும் போட்டியின் முடிவு குறித்து சிந்திக்காமல் ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும். எந்த பந்து வீச்சாளரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பதை தான் யோசிப்பேன்.

எங்கள் அணியில் இளம் பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். குறிப்பாக பனியின் தாக்கம் இருக்கும் சமயத்தில் இறுதி கட்ட ஓவர்களை இளம் பந்து வீச்சாளர்கள் வீசுவது என்பது கடினமானதாகும். இருப்பினும் எங்கள் பவுலர்கள் கடினமாக உழைத்து வருகிறார்கள். சிறப்பு வாய்ந்த பந்து வீச்சு பயிற்சியாளர் வெய்ன் பிராவோவின் கீழ் பயிற்சியில் ஈடுபடும் எங்களது இளம் பந்து வீச்சாளர்கள் நிச்சயம் நல்ல நம்பிக்கையை பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்