டி20 போட்டிகளில் கடைசி 3-4 ஓவர்கள்தான் முக்கியம் - ஹர்மன்பிரீத் கவுர்

மகளிர் டி20 உலகக்கோப்பையை வெல்வோம் என்று ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-17 06:38 GMT

image courtesy: AFP

புதுடெல்லி,

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த தொடரில் இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் களமிறங்க உள்ளது. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அக்டோபர் 4ம் தேதி நியூசிலாந்தை துபாயில் சந்திக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 6-ல் துபாயில் நடக்கிறது. இதனையடுத்து இந்தியா தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் முறையே 9-ம் தேதி இலங்கையுடனும், 13-ம் தேதி ஆஸ்திரேலியாவுடனும் மோத உள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹர்மன்பிரீத் கவுர் பேசுகையில், "டி20 போட்டிகளில் கடைசி 3-4 ஓவர்கள்தான் முக்கியம். டி20 ஒன்றும் சிறிய வடிவிலான போட்டி அல்ல. மொத்தம் 40 ஓவர்கள் விளையாடப்படுகிறது. கடைசி 4-5 ஓவர்களில் மனரீதியாக வலுவாக இருக்கும் அணிகளே வெற்றி பெறுகின்றன. அதில்தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். கடைசி கட்டத்தில் மனதளவில் தொடர்ந்து நிலையாக இருந்தால் திட்டங்களை தடுமாற்றமின்றி சிறப்பாக செயல்படுத்தி வெற்றி பெற முடியும். இவற்றை சரியாக செய்து இந்த முறை கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்