கோலிக்கு மற்ற பேட்ஸ்மேன்களின் ஒத்துழைப்பு அவசியம் - ஆஸ்திரேலிய வீரர்
ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியுடன் புள்ளிபட்டியலில் 8-வது இடத்தில் தவிக்கிறது.
புதுடெல்லி,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வி கண்டு புள்ளிபட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
அந்த அணியில் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்களின் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் இல்லை. இதன் காரணமாக அந்த அணி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூரு அணியின் மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் விராட் கோலியுடன் இணைந்து விளையாட வேண்டியது அவசியம் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
பெங்களூரு அணியின் மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் விராட் கோலியுடன் இணைந்து விளையாட வேண்டியது அவசியம். இதை செய்தால் நிச்சயம் நிலைமையை மாற்ற முடியும். ஆனால் தற்போது அவர்கள் அதை செய்யாததால் ஒட்டுமொத்த அழுத்தமும் விராட் கோலி மீது விழுகிறது.
இந்த சீசனை கோலி நன்றாக தொடங்கி இருக்கிறார். ஆனால் எல்லா நேரமும் அவரால் ரன் குவித்து கொண்டு இருக்க முடியாது. எனவே மற்ற ஆட்டக்காரர்களின் ஒத்துழைப்பு அவருக்கு தேவை. விராட் கோலி வியக்கத்தக்க வீரர். உலகில் உள்ள பெரும்பாலான வீரர்களை விட எல்லா சூழலிலும் சிறப்பாக செயல்படுகிறார்.
சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாடக்கூடியவர். எல்லா மைதானத்திலும் 180 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்பதில்லை. சில மைதானங்களில் 150-160 ரன்களே போதுமானது. இவ்வாறு அவர் கூறினார். பெங்களூரு அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.