ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் அதிரடி... 214 ரன்கள் குவித்த ராஜஸ்தான்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 214 ரன்கள் குவித்தது.
ஜெய்ப்பூர்,
16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன.
இதில் ஜெய்ப்பூரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐடன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தது. இருவரும் ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜோஸ் பட்லர் 59 பந்துகளில் 95 ரன்கள் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.
இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சனும் அரைசதத்தை கடந்து 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது.