வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் அவரை அணியில் சேருங்கள் - இந்திய முன்னாள் வீரர்

இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-09-23 08:50 GMT

image courtesy: ANI

மும்பை,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி கான்பூரில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ஏனெனில் தமக்கு கிடைத்த 12 டெஸ்ட் போட்டி வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடியுள்ள குல்தீப் 53 விக்கெட்டுகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே அவரை பெஞ்சில் அமர வைப்பது நியாயமல்ல என்றும் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "குல்தீப் யாதவ் நீக்கப்படக்கூடாது என்று நான் கருதுகிறேன். ஒருவேளை சென்னையில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இல்லாமல் இருந்திருந்தாலும் அவரால் இந்திய அணி பயனையே சந்தித்திருக்கும். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பிட்ச்களில் முதல் ஒன்றரை நாட்களில் மட்டுமே உதவிகளை பெறுவார்கள். அதன் பின் பந்து சுழலும்போது குல்தீப் யாதவ் போன்றவரை உங்களால் வெளியே அமர வைக்க முடியாது. எனவே கான்பூரில் இந்தியா இந்த அணுகு முறையை பயன்படுத்த வேண்டும்.

ஒருவேளை அங்கு பச்சைப் புற்களுடன் கூடிய பிட்ச் அமைக்கப்பட்டு சூரியன் வெளியே இருந்தாலும் அது சில மணி நேரங்கள் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி செய்யும். அதைப் பயன்படுத்துவதற்கு சிராஜ் மற்றும் பும்ரா போதுமானவர்கள். உங்களிடம் தங்களுடைய தரத்தை நிரூபித்துள்ள ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்கள் அனைவரையும் நீங்கள் விளையாட வைக்க வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்