டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள்... காலிஸ் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்சுகள் பிடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையையும் ஜோ ரூட் படைத்துள்ளார்.

Update: 2024-09-01 14:57 GMT

image courtesy; AFP

லண்டன்

இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 427 ரன்களும், இலங்கை 196 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 231 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 54.3 ஓவர்களில் 251 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 103 ரன்கள் குவித்தார். இவர் முதல் இன்னிங்சிலும் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கை அணிக்கு 483 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி இலங்கை அணி ஆடி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் 2 கேட்சுகளை பிடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர்கள் பட்டியலில் ஜாக் காலிஸின் (200 கேட்சுகள்) சாதனையை ஜோ ரூட் (200* கேட்சுகள்) சமன் செய்துள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்சுகள் பிடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் ஜோ ரூட் படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இந்தியாவின் ராகுல் டிராவிட் (210 கேட்சுகள்) உள்ளார். ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் 10 கேட்சுகள் பிடித்தால் அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற இந்தியாவின் ராகுல் டிராவிட் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்தவர்கள் விவரம்;

1. ராகுல் டிராவிட் - 210 கேட்சுகள்

2. மகிலா ஜெயவர்தனே - 205 கேட்சுகள்

3. ஜேக் காலிஸ் / ஜோ ரூட் - 200 கேட்சுகள்

4. ரிக்கி பாண்டிங் - 196 கேட்சுகள்

Tags:    

மேலும் செய்திகள்