அவர்கள் இருவரும் எங்கள் அணியுடன் இருப்பது நன்றாக உள்ளது - சஞ்சு சாம்சன்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது.;
சண்டிகர்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் திரில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 31 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் கேஷவ் மகராஜ் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 39 ரன்களையும், ஹெட்மயர் 27 ரன்களையும் குதித்து அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில்: "கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி சில சுவாரஸ்யமான முடிவுகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இருப்பினும் இந்த இலக்கை எட்டிப் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. கடைசி ஓவரில் பாஸ்ட் பவுலர் வந்தால் நிச்சயம் இலக்கை எட்ட முடியும் என்று நினைத்துக் கொண்டே இருந்தோம். அந்த வகையில் ஹெட்மயர் இந்த போட்டியை முடித்து கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
கடந்த 3-4 ஆண்டுகளாகவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி இதேபோன்று சுவாரசியமான முடிவுகளைத்தான் பெற்றிருக்கிறது. ஹெட்மயர் கடந்த பல ஆண்டுகளாகவே எங்கள் அணிக்காக இதே போன்று பல போட்டிகளை முடித்துக் கொடுத்திருக்கிறார். அனுபவம் நிறைந்த அவர் போட்டியை பினிஷிங் செய்து கொடுப்பதில் தனது திறனை மென்மேலும் வளர்த்துள்ளார். இதேபோன்று பலமுறை அவர் எங்களுக்காக போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்துள்ளார். ராவ்மன் பவல் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் எங்களது அணியுடன் இருப்பது நன்றாக இருக்கிறது" என்று கூறினார்.