இந்திய ரசிகர்கள் அவரை விமர்சிப்பது சரியல்ல..? பாக். முன்னாள் வீரர்

தற்போது பயிற்சியாளர் மாறியுள்ளதால் இந்திய அணியும் மாறியுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று பாசித் அலி தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-10 03:16 GMT

கராச்சி,

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 0 (3 போட்டிகள்) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் கடந்த 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் தோல்வியை சந்திக்காமல் வந்த இந்தியாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது.

சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக எதிர்கொள்ளாதது தோல்விக்கு காரணமானது. அது போக ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோரை பயிற்சியாளர் கம்பீர் 6, 7வது ஆகிய பேட்டிங் இடங்களில் விளையாட வைத்ததும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் கம்பீர் பயிற்சியாளராக செயல்பட்ட முதல் தொடரிலேயே இலங்கையிடம் 27 வருடங்கள் கழித்து இந்தியா ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆரம்பத்திலேயே கவுதம் கம்பீரின் பயிற்சி சுமாராக இருக்கிறது என்று இந்திய ரசிகர்கள் விமர்சிப்பது சரியல்ல என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். மேலும் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக தொடர்வாரா? அல்லது விராட், ரோகித் போன்ற சீனியர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்பது தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்ருமாறு:- "அந்த 3 போட்டிகளில் இலங்கை 150 ஓவர்கள் விளையாடியது. ஆனால் இந்தியா 116 ஓவர்கள் மட்டுமே விளையாடியது. டி20 ஸ்டைலில் விளையாடும் இந்திய பேட்ஸ்மேன்கள் நீண்ட பார்மட்டுக்கு தயாராக இல்லை. தற்போது பயிற்சியாளர் மாறியுள்ளதால் அணியும் மாறியுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். புதிய பயிற்சியாளர் தனது சொந்த பாலிசியை கொண்டு வந்துள்ளார். இருப்பினும் அதை வீரர்கள்தான் செயல்படுத்த வேண்டும். ஆனால் ரோகித் சர்மாவை தவிர்த்து அதை யாராவது செயல்படுத்தினார்களா? என்று கேட்டால் இல்லை.

உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனான விராட் கோலியிடம் என்ன செயல்பாடு வந்தது? சுப்மன் கில் இப்படி அவுட்டானால் யார் தோற்பார்கள்? இந்தியாதான் தோற்கும். அப்படி தங்களால் முடிந்த வரை முயற்சித்தும் இந்திய வீரர்களால் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. எனவே கம்பீரின் பயிற்சி சரியில்லை என்றே முதல் தொடரிலேயே சொல்வது தவறு. அவருக்கு ஆஸ்திரேலிய மண்ணில்தான் உண்மையான சோதனை இருக்கிறது. தற்போதையை நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்புதான் கம்பீர் தொடர்வாரா? அல்லது ரோகித், விராட் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவார்களா? என்பது போன்ற தெளிவான முடிவுகள் தெரிய வரும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்