ஐ.பி.எல்: மும்பையில் இருந்து ஆர்.சி.பி-க்கு மாறுவாரா ரோகித் சர்மா...? - டிவில்லியர்ஸ் பதில்

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கிறது.

Update: 2024-10-07 09:14 GMT

image courtesy: PTI

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தொடருக்கான புதிய ஏல விதிமுறைகளை பி.சி.சி.ஐ. வெளியிட்டது. அதில் அன்கேப்ட் வீரர் என்ற விதிமுறையை பி.சி.சி.ஐ. மீண்டும் கொண்டு வந்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா கடந்த ஆண்டு அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் ரோகித் சர்மா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

மெகா ஏலத்திற்கு முன்பாக ரோகித் சர்மா மும்பை அணியிலிருந்து விலகிவிடுவார் என்றும், அப்படி நடந்தால் ஏலத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அவரை வாங்கி கேப்டனாக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டனும், ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரருமான டிவில்லியர்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இத்தகைய பதிவை கண்டவுடன் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து பெங்களூருவுக்கு வந்தால் அது பெரிய செய்தியாகும். இது ஹர்திக் பாண்ட்யா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்சுக்கு வந்ததைவிட மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும்.

அவர் குஜராத் அணியில் இருந்து மாறியது எனக்கு ஆச்சரியம் கிடையாது. ரோகித் தனது சக போட்டியாளர் அணியுடன் இணைந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பே கிடையாது. அவர் மும்பை அணியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்