ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு, டிஜிட்டல் உரிமம் மொத்தம் ரூ.48,390 கோடிக்கு விற்பனை : பிசிசிஐ அறிவிப்பு

அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் மொத்தம் ரூ.48, 390 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Update: 2022-06-14 23:27 GMT

மும்பை,

அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் மொத்தம் ரூ.48, 390 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த 5 ஆண்டுக்கு (2023 முதல் 2027-ம் ஆண்டு வரை) டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் வழங்குவதற்கான மின்னணு ஏலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முன்னணி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தங்களது தொகையை குறிப்பிட்டு போட்டிபோட்டு ஏலம் கேட்டன. எதிர்பார்த்தபடியே இந்த முறை ஐ.பி.எல். 'மதிப்பு' தாறுமாறாக எகிறியது.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஒளிபரப்பு உரிமத்தை இந்த தடவை 4 வகையாக பிரித்து ஏலம் விட்டது. 3 நாட்கள் நீடித்த இந்த திரில்லிங்கான ஏலத்தின் முடிவில் யார்-யார் உரிமத்தை பெற்றார்கள் என்பது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இந்திய துணை கண்டத்துக்கான ஐ.பி.எல். போட்டியை டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான அதிர்ஷ்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமான டிஸ்னி ஸ்டார் ரூ.23,575 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 410 ஐ.பி.எல். ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் ஒரு ஆட்டத்துக்கு ரூ.57½ கோடியை டிஸ்னி ஸ்டார், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கும்.

இந்திய துணை கண்டத்துக்குரிய இணையவழி ஒளிபரப்புக்கான டிஜிட்டல் உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த வியாகாம் 18 பெற்றது. இந்த நிறுவனம் ஒரு ஆட்டத்திற்கு ரூ.50 கோடியை கட்டணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு செலுத்தும். அத்துடன் ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம், பிளே-ஆப், இறுதிப்போட்டி உள்பட குறிப்பிட்ட 18 ஆட்டங்களுக்குரிய இந்திய துணை கண்டத்துக்கான பிரத்யேக டிஜிட்டல் உரிமத்தையும் வியாகாம் 18 நிறுவனம் 5 ஆண்டுக்கு ரூ.2,991 கோடிக்கு தட்டிச் சென்றது. கடைசி பிரிவான எஞ்சிய உலக நாடுகளுக்கான டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் ரூ.1,324 கோடிக்கு விற்கப்பட்டது. இதை குறிப்பிட்ட நாடுகளுக்கு ஒளிபரப்பு செய்வது என்ற அடிப்படையில் வியாகாம்18 மற்றும் குர்கானைச் சேர்ந்த இண்டர்நெட் தொழில்நுட்ப கம்பெனியான டைம்ஸ் இண்டர்நெட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து பெற்றன.

இந்த 4 பிரிவையும் சேர்த்து மொத்தம் ரூ.48 ஆயிரத்து 390 கோடிக்கு ஐ.பி.எல். ஒளிபரப்பு, டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டு உள்ளது. முந்தைய 5 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த தொகை இரு மடங்கு அதிகமாகும். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'ஐ.பி.எல். கிரிக்கெட் அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இன்று இந்திய கிரிக்கெட்டுக்கு மறக்க முடியாத முக்கியமான நாளாகும். மின்னணு ஏலம் மூலம் ரூ.48,390 கோடியை ஈட்டி, ஐ.பி.எல். புதிய உச்சத்தை தொட்டுள்ளது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டத்தின் மதிப்பு அடிப்படையில் உலக அளவிலான லீக் விளையாட்டுகளில் ஐ.பி.எல். 2-வது இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு பல்வேறு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து இந்தியா முழுவதும் உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பை அடிமட்ட அளவில் இருந்து வலுப்படுத்துவோம்' என்றார்.

10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தற்போது 74 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆட்டங்களின் எண்ணிக்கையை 2025, 2026-ம் ஆண்டுகளில் 84 ஆகவும், 2027-ம் ஆண்டில் 94 ஆகவும் உயர்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தேசித்துள்ளது. ஐ.பி.எல். போட்டிக்காக ஐ.சி.சி.யின் அடுத்த வருங்கால போட்டி அட்டவணையில் 2½ மாதங்கள் ஒதுக்கப்படும் என்று நம்புகிறோம். இது தொடர்பாக ஐ.சி.சி. மற்றும் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடம் பேசி இருக்கிறோம் என்றும் ஜெய் ஷா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்