ஐ.பி.எல்.: ஆர்.சி.பி. அணிக்கெதிராக தனித்துவ சாதனை படைத்த பும்ரா

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

Update: 2024-04-12 10:09 GMT

image courtesy: twitter/@mipaltan

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளஸ்சிஸ் 61, ரஜத் படிதார் 50, தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் அடித்தனர். மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

அதைத்தொடர்ந்து 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பைக்கு ரோகித் சர்மா 38, இஷான் கிஷன் 69, சூர்யகுமார் யாதவ் 52, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 26, திலக் வர்மா 16 ரன்கள் அடித்து 15.3 ஓவரிலேயே எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

முன்னதாக இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் பும்ரா ஐ.பி.எல். வரலாற்றில் ஆர்.சி.பி. அணிக்கெதிராக மாபெரும் தனித்துவ சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு: ஐ.பி.எல். வரலாற்றில் ஆர்.சி.பி. அணிக்கெதிராக 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் பந்து வீச்சாளர் என்ற தனித்துவ சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஷிஸ் நெஹ்ரா 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதே ஆர்.சி.பி. அணிக்கெதிராக ஒரு பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்