ஐ.பி.எல்; மும்பையில் பாண்ட்யாவுக்கு எதிராக அதிக சத்தத்துடன் கோஷங்கள் எழுப்பப்படலாம் - மனோஜ் திவாரி

அகமதாபாத் மைதானத்தில் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Update: 2024-03-27 11:56 GMT

Image Courtesy: AFP

மும்பை,

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு ஐ.பி.எல் சீசன்களில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யா இந்த ஆண்டு மும்பை அணிக்கு திரும்பி அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

மும்பை அணிக்காக 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண வீரராக விளையாடி வருகிறார். ஆனால் இந்த முடிவு பெரும்பாலான மும்பை ரசிகர்களிடமே வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் அகமதாபாத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் போது குஜராத் அணியில் இருந்து விலகி மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பபம் கெவின் பீட்டர்சன் உள்ளிட்ட பல முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து ரோகித்தை நீக்கியதற்காக மும்பை ரசிகர்களே பாண்ட்யாவுக்கு எதிராக அதிக சத்தமாக கூச்சலிட்டு எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக மனோஜ் திவாரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, மும்பையில் அவர் எப்படி வரவேற்கப்படுகிறார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். ஏனெனில் இங்கே அவருக்கு எதிராக அதிக சத்தத்துடன் கோஷங்கள் எழுப்பப்படலாம். ஏனென்றால் ஒரு மும்பை ரசிகராக, ரோகித் சர்மாவின் ரசிகராக கேப்டன்ஷிப் பொறுப்பு பாண்ட்யாவிடம் ஒப்படைக்கப்பட்டததை யாரும் எதிர்பார்க்கவில்லை.

5 கோப்பைகளை வென்று கொடுத்தும் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை இழந்துள்ளார். அதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியாது. அந்த முடிவு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதற்கான ரியாக்சனை தான் நீங்கள் களத்தில் பார்க்கிறீர்கள்.

பாண்ட்யா உலகக் கோப்பையில் விளையாட இந்திய அணியில் இடம்பிடிக்க சிறப்பாக செயல்பட வேண்டும். ஏனெனில் அனைத்து வீரர்களும் பிட்டாகி இந்தியாவுக்காக விளையாட தயாராக இருப்பது அவசியம். அதிலும் நம்பர் ஒன் ஆல் ரவுண்டரான அவர் பார்முக்கு திரும்பி நன்றாக செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்