ஐ.பி.எல்; ஊதா தொப்பியை கைப்பற்றி பிராவோ, புவனேஷ்வர் உடன் சாதனை பட்டியலில் இணைந்த ஹர்ஷல் படேல்

ஹர்ஷல் படேல் ஊதா நிற தொப்பியை தற்போது 2வது முறையாக வென்றுள்ளார்.

Update: 2024-05-27 06:45 GMT

Image Courtesy: @PunjabKingsIPL / @IPL / AFP

சென்னை,

17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி கொல்கத்தாவின் அபார் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ரசல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த தொடரில் அதிக ரன் அடித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பி விராட் கோலிக்கும் (741 ரன்), அதிக விக்கெட் எடுத்தவருக்கான ஊதா நிற தொப்பி ஹர்ஷல் படேலுக்கும் (24 விக்கெட்) வழங்கப்பட்டது. ஹர்ஷல் படேல் ஊதா நிற தொப்பியை தற்போது 2வது முறையாக வென்றுள்ளார். ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டில் பெங்களூரு அணிக்காக ஆடிய ஹர்ஷல் படேல் அப்போதும் ஊதா நிற தொப்பியை வென்றிருந்தார்.

இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் ஊதா நிற தொப்பியை அதிக முறை கைப்பற்றியவர்கள் பட்டியலில் டுவைன் பிராவோ, புவனேஷ்வர் குமார் ஆகியோருடன் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

ஊதா நிற தொப்பியை அதிக முறை வென்றவர்கள்;

டுவைன் பிராவோ (சென்னை அணிக்காக) - 2013, 2015

புவனேஷ்வர் குமார் (ஐதராபாத் அணிக்காக) - 2016, 2017

ஹர்ஷல் படேல் (பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்காக) - 2021, 2024

Tags:    

மேலும் செய்திகள்