ஐ.பி.எல். கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிராக 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2024-05-05 17:59 GMT

Image Courtesy : @KKRiders

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன் - சால்ட் களமிறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில், அதிரடியாக விளையாடிய சால்ட் 32 ரன்களில் (14 பந்துகள்) ஆட்டமிழந்தார். பின்னர் ரகுவன்ஷி - சுனில் நரைன் ஜோடி சேர்ந்தனர். இதில் ரகுவன்ஷி நிதானமான ஆட்டத்தை கடைபிடிக்க மறுமுனையில் சுனில் நரைன் அதிரடியாக விளையாடினார். லக்னோ பந்து வீச்சை வெளுத்து வாங்கிய அவர் 39 பந்துகளில் 81 ரன்கள் அடித்த நிலையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய ரசல் 12 ரன்களிலும், ரகுவன்ஷி 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிங்கு சிங் 16 ரன்களில் ஆட்டமிழந்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். கடைசி கட்டத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரமன்தீப் சிங் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஸ்ரேயாஸ் 15 பந்துகளில் 23 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார். ரமன்தீப் சிங் 6 பந்துகளில் 25 ரன்கள் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 81 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி லக்னோ அணி பேட்டிங்கை தொடங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் அர்ஷின் குல்கர்னி களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் 25 ரன்களிலும், அர்ஷின் 9 ரன்களிலும் அவுட்டான நிலையில், அடுத்து வந்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 21 பந்துகளில் 36 ரன்கள் அடித்து கேட்ச் ஆகி வெளியேறினார்.

தீபக் ஹூடா 5 ரன்களில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரன் 10 ரன்களில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததைத் தொடர்ந்து, லக்னோ அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்