அர்ஷத் கான் போராட்டம் வீண்: லக்னோ அணியை வீழ்த்திய டெல்லி

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி திரில் வெற்றிபெற்றது.

Update: 2024-05-14 17:57 GMT

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 64-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மெக்கர்க் , அபிஷேக் போரெல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். தொடக்கத்தில் மெக்கர்க், அர்ஷத் கான் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷாய் ஹோப், போரெல் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர்.

இந்த ஜோடியில் ஷாய் ஹோப் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அரைசதமடித்த போரெல் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் லக்னோ அணியின் பந்துவீச்சை துவசம்சம் செய்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 22 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார்.

இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியின் சார்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் சார்பில் குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் கே.எல்.ராகுல் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து டி காக் 12 ரன்களும், அடுத்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 5 ரன்களும், தீபக் ஹூடா (0) ரன் ஏதும் எடுக்காமலும், ஆயூஸ் பதோனி 6 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

 

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரன், தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 61 (27) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக குர்ணால் பாண்ட்யாவுடன், அர்ஷத் கான் ஜோடி சேர்ந்தார். ஓரளவு ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் குர்ணால் பாண்ட்யா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறக்கிய யுத்வீர் சிங் 14 ரன்களில் வெளியேறினார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய அர்ஷத் கான் 25 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்து களமிறங்கிய ரவி பிஷ்னோய் 2 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஷத் கான் 58 (33) ரன்களும், நவீன் உல் ஹக் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், கலில் அகமது, அக்சர் பட்டேல், முகேஷ் குமார், குல்தீப் யாதவ் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

லக்னோ அணிக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளநிலையில், பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்