ஐ.பி.எல்.2025: மெகா ஏலம் குறித்து வெளியான சில முக்கிய தகவல்கள்... ரசிகர்கள் மகிழ்ச்சி

பெங்களூருவில் பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2024-09-28 14:41 GMT

பெங்களூரு,

அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பல்வேறு அணிகள் தரப்பிலும் ஏராளமான கருத்துகளை பெற்றுக் கொண்ட பிசிசிஐ, அதுகுறித்து விரிவாக ஆலோசித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். ரிடென்ஷன் பாலிசி விதிமுறைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் பல்வேறு அணிகள் தரப்பிலும் அதிகளவிலான வீரர்களை ரிடென்ஷன் செய்யும் வகையில் விதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த அணிக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு முடிவுகளை எடுக்க பி.சி.சி.ஐ.-க்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது.

பொதுவாக முன்பு நடைபெற்ற மெகா ஏலங்களில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இரண்டு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி, மேலும் இரண்டு வீரர்களை வாங்கிக் கொள்ளவும் பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது.

இந்த சூழலில் இம்முறை மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு முறை பயன்படுத்தப்படாது என்றும், ஒவ்வொரு அணியும் 5 வீரர்களைத்தான் தக்கவைக்க பி.சி.சி.ஐ. அனுமதி வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள என்சிஏ அலுவலகத்தில் பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஐபிஎல் விதிமுறைகள் குறித்த செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும், மெகா ஏலத்தில் ஒரு ஆர்டிஎம் வாய்ப்பு அளிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலமாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை எளிதாக தக்க வைத்துக் கொள்ள முடியும். 5 + 1 ஆர்டிஎம் வாய்ப்பு அளிப்பதால், மீண்டும் முக்கிய வீரர்களை அந்த அணி நிர்வாகங்கள் தக்க வைக்க முடியும். இதனால் ஐ.பி.எல். ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்