ஐ.பி.எல். 2025: தோனி குறித்து மனம் திறந்த சுரேஷ் ரெய்னா

அடுத்த ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

Update: 2024-08-31 02:57 GMT

image courtesy: AFP

புதுடெல்லி,

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது.

ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 42 வயதை கடந்துள்ளார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார்.

அத்துடன் கடந்த சில வருடங்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு அவர் பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். அதனால் இந்த வருடத்துடன் தோனி ஓய்வு பெற்றதாகவே பெரும்பாலான ரசிகர்கள் கருதுகின்றனர். இருப்பினும் அடுத்த சீசனில் தோனி விளையாடி சென்னை மண்ணில் ஓய்வு பெறுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. அந்த காரணத்தால் அதிகபட்சமாக ஒரு அணியால் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அது போன்ற நிலையில் தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே தாம் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று எம்.எஸ். தோனி சமீபத்தில் மறைமுகமாக தெரிவித்தார்

இந்நிலையில் 2024 சீசனில் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கினாலும் அற்புதமாக பேட்டிங் செய்ததாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். எனவே 2025 சீசனில் தோனி மீண்டும் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி ரெய்னா பேசியது பின்வருமாறு:- "கடந்த வருடம் பேட்டிங் செய்த விதத்தை வைத்து எம்எஸ் தோனி ஐ.பி.எல். 2025 தொடரில் விளையாடுவதை நான் விரும்புகிறேன். அதே போல கேப்டனாக ருதுராஜுக்கு இன்னும் ஒரு வருடம் தேவை என்று கருதுகிறேன். கடந்த வருடம் அவர் நன்றாகவே கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும் பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு பின் அவருடைய கேப்டன்ஷிப் பற்றி பலரும் பல்வேறு விஷயங்களை பேசினார். உண்மையில் ருதுராஜ் நல்ல வேலையை செய்தார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்