ஐ.பி.எல். 2025: ரிஷப் பண்ட் கட்டாயம் வேறு அணிக்கு செல்ல மாட்டார் - கங்குலி

டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அடுத்த ஐ.பி.எல். தொடரில் வேறு அணிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Update: 2024-08-12 04:21 GMT

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டது என இப்போதே அடுத்த சீசன் விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது.

மேலும் பல அணிகளில் உள்ள வீரர்கள் மற்றும் கேப்டன்கள் வேறு அணிகளுக்கு மாற உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனிடையே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் அணியிலிருந்து விலக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேற வாய்ப்பே இல்லை என அந்த அணியின் நிர்வாக இயக்குனரான கங்குலி உறுதிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து பேசி அவர் கூறுகையில், "ரிஷப் பண்ட்டை தக்க வைக்க டெல்லியில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. ரிஷப் பண்ட் கட்டாயம் வேறு அணிக்கு செல்ல மாட்டார் . டெல்லி நிர்வாகம் இந்திய முன்னாள் வீரர்களையே அணியின் பயிற்சியாளராக நியமிக்க விரும்புகிறது. ஏனெனில் வெளிநாட்டு பயிற்சியாளர்களால் இந்தியாவில் அதிக நேரம் தங்க முடியாது. ஆனால் இந்திய பயிற்சியாளர்கள் இருக்கும் பட்சத்தில் அணியில் இருக்கும் இளம் வீரர்களை ஒரு ஆண்டில் எப்பொழுது வேண்டுமானாலும் அழைத்து பயிற்சி அளிக்கலாம் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்