ஐ.பி.எல். 2024; பிரித்வி ஷாவை ஏன் அணியில் எடுக்கவில்லை - விளக்கம் அளித்த கங்குலி
நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் மார்ஷ் ஆடி வருகின்றனர்.;
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த சீசனில் இதுவரை 2 லீக் ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி அணி 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் டெல்லி அணியில் கடந்த ஐ.பி.எல். சீசனில் வார்னருடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிரித்வி ஷா நடப்பு தொடரில் டெல்லி ஆடியுள்ள 2 ஆட்டங்களிலும் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை.
இதையடுத்து டெல்லி அணியில் பிரித்வி ஷா ஏன் இடம்பெறவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக டெல்லி அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது,
பிரித்வி ஷா ஒரு தொடக்க ஆட்டக்காரர். நாங்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் ஜோடியை தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்க முடிவு செய்தோம். ரிக்கி புய் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இது ஒரு வித்தியாசமான தொடக்க ஜோடி.
வார்னர் மற்றும் மார்ஷ் ஆஸ்திரேலியாவுக்காக தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி உள்ளனர். அவர்கள் அதில் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். எனவே நாங்கள் பிரித்வி ஷாவை வெளியே வைத்துவிட்டு வார்னர் மற்றும் மார்ஷ் ஜோடியை தொடக்க ஆட்டக்காரர்களாக ஆட வைக்க முடிவு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.