ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணியில் ஜேமிசனுக்கு பதிலாக தென்ஆப்பிரிக்க வீரர் தேர்வு...!
ஐபிஎல் 2023 தொடருக்கான சிஎஸ்கே அணியில் கைல் ஜேமிசனுக்கு பதிலாக தென்ஆப்பிரிக்க வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.;
சென்னை,
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. 31ம் தேதி நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின் போது நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான கைல் ஜேமிசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1 கோடிக்கு எடுத்தது. இவரது வருகையின் காரணமாக சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு பலமாக காணப்பட்டது.
ஆனால் சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக வரும் ஐபிஎல் தொடரில் இருந்து ஜேமிசன் விலகினார். அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரரை அறிவிக்காமல் சென்னை அணி நிர்வாகம் இருந்தது.
இந்நிலையில் காயம் காரணமாக விலகி உள்ள ஜேமிசனுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சிசண்டா மகலா சேர்க்கப்பட்டுள்ளார்.