சர்வதேச டி20 கிரிக்கெட்; ஒரு ஓவரில் அதிக ரன்கள்... யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த சமோவா வீரர்
2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
அபியா,
2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதில் தற்போது வரை 12 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 8 இடத்திற்கு தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான டி20 உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டி ஒன்றில் சமோவா - வனுவாடு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சமோவா 20 ஓவர்களில் 10 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் குவித்தது. சமோவா தரப்பில் டேரியஸ் விசர் 132 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 175 ரன் இலக்கை நோக்கி ஆடிய வனுவாடு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 10 ரன் வித்தியாசத்தில் சமோவா அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய டேரியஸ் விசர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன் அடித்த யுவராஜ் சிங், பொல்லார்டு, திபேந்திர சிங் ஐரி, நிகோலஸ் பூரன் (36 ரன்) ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.
அதாவது வனுவாடு வேகப்பந்து வீச்சாளர் நளின் நிபிகோ வீசிய ஒரு ஓவரில் டேரியஸ் விசர் 39 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். இந்த ஓவரில் டேரியல் விசர் மொத்தம் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள் அடித்தார். மேலும் இந்த ஓவரில் மொத்தம் மூன்று நோ-பால்கள் வீசப்பட்டது.
இப்படி மொத்தமாக 39 ரன்கள் கிடைத்தது. இதன் மூலமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ர சாதனையை டேரியஸ் விசர் படைத்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட விவரம்;
டேரியஸ் விசர் (சமோசா) - 39 ரன்
யுவராஜ் சிங் (இந்தியா) - 36 ரன்
பொல்லார்ட்டு (வெஸ்ட் இண்டீஸ்) - 36 ரன்
ரோகித் சர்மா - ரிங்கு சிங் (இந்தியா) - 36 ரன்
திபேந்திர சிங் ஐரி (நேபாளம்) - 36 ரன்
நிகோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) - 36 ரன்