இந்திரஜித் அரைசதம்...திண்டுக்கல் டிராகன்ஸ் 149 ரன்கள் சேர்ப்பு

திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக இந்திரஜித் 51 ரன் எடுத்தார்.

Update: 2024-07-08 15:31 GMT

Image Courtesy: @TNPremierLeague

சேலம்,

8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிவம் சிங் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஷிவம் சிங் 2 ரன்னிலும் அஸ்வின் 6 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து விமல் குமார் மற்றும் பாபா இந்திரஜித் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விமல் குமார் 47 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திரஜித் அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய சரத் குமார் 5 ரன், பூபதி குமார் 8 ரன், கிஷோர் 2 ரன், சக்கரவர்த்தி 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக இந்திரஜித் 51 ரன் எடுத்தார். சேலம் தரப்பில் சன்னி சந்து, ஹரிஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி ஆட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்