உலகக் கோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி..!!

2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியலில் இந்திய அணி தற்போது முதலிடத்தில் உள்ளது.

Update: 2023-10-22 18:18 GMT

தர்மசாலா,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெற்றது. இதில், இந்தியா - நியூசிலாந்து மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக நியூசிலாந்து அணியின் கான்வே மற்றும் வில்யங் ஆகியோர் களமிறங்கினர். கான்வே வந்த வேகத்திலேயே முகமது சிராஜ் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். 17 ரன்களில் வில் யங்கும் ஷமியின் பந்தில் போல்டாகவே அவரும் வெளியேறினார். இதனையடுத்து அணி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ரன் ரேட்டை உயர்த்தியது.

அதிகபட்சமாக ரச்சின் 75 ரன்களும், மிட்செல் 137 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், சிராஜ் , பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சுப்மன் கில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். 



இந்த நிலையில் 15.4 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்த நிலையில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி , ஸ்ரேயாஷ் அய்யர் ஜோடி அதிரடியாக ரன்களை குவித்த நிலையில் ஸ்ரேயஸ் அய்யர் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கோலியுடன் இணைந்த கே.எல்.ராகுல் 27ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சூர்ய குமார் யாதவும் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனையடுத்து விராட் கோலி-ரவீந்திர ஜடேஜா ஜோடி இணைந்தது.

பின்னர் இந்திய அணி 269 ரன்கள் எடுத்திருந்தநிலையில் விராட் கோலி 104 பந்துகளில் 95 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது விராட் கோலி சிக்ஸர் அடிக்க முயன்ற போது கேட்ச் ஆகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனைத் தொடர்ந்து ஜடேஜா-முகமது ஷமி ஜோடி சேர்ந்தது. இறுதியாக 4 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு விளாசினார்.

இறுதியில் இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜடேஜா 39 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவுசெய்தது. அத்துடன், உலகக்கோப்பை தொடரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியலில் இந்திய அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. இதன்படி 10 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து 2-வது இடத்திலும், 6 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் முறையே 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்