பாகிஸ்தான் அணி குறித்து கவலை தெரிவித்த இந்திய வீரர்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் இழந்தது.

Update: 2024-09-07 09:44 GMT

சென்னை,

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற வங்காளதேசம், பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் வேளையில் தற்போது வங்காளதேச அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த வீழ்ச்சி குறித்து பேசியுள்ள இந்திய வீரர் அஸ்வின் கூறுகையில், "பாகிஸ்தான் அணியில் ஒரு காலத்தில் ஜாம்பவான்கள் வீரர்கள் நிரம்பி இருந்தனர். ஆனால் பாகிஸ்தான் அணியின் தற்போதைய நிலை எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அதேவேளையில் வங்காளதேச அணிக்கு இது ஒரு அற்புதமான வெற்றி. பாகிஸ்தான் அணியானது கடந்த 1000 நாட்களாக சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் போனது வருத்தமான விஷயம்.

முன்பு பாகிஸ்தான் அணியில் இம்ரான் கான், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர், வாசிம் அக்ரம், சயீத் அன்வர், இன்சமாம் உல் ஹக் என ஜாம்பவான் வீரர்கள் பலர் இருந்தனர். ஆனால் தற்போது உள்ள பாகிஸ்தான் வீரர்களின் செயல்பாடு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. பாகிஸ்தான் அணி இப்போது எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்த்தால் உண்மையிலேயே என்னால் அதை நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு அவர்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளனர்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்