டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க நியூயார்க் சென்றடைந்த இந்திய கிரிக்கெட் அணி

டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி நியூயார்க் சென்றடைந்தது.

Update: 2024-05-27 06:03 GMT

Image Grab On Video Posted By @BCCI

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ள 20 அணி நிர்வாகங்களும் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் சிறப்பாக தயாராகும் பொருட்டு 16 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதையடுத்து இந்த தொடரின் பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.

முதல் நாளான இன்று 3 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் நேபாளம் - கனடா, ஓமன் - பப்புவா நியூ கினியா, நமீபியா - உகாண்டா அணிகள் மோத உள்ளன. இந்திய அணி தனது ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தை ஜூன் 1ம் தேதி வங்காளதேசத்திற்கு எதிராக ஆட உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இரு பிரிவாக அமெரிக்கா செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தலைமை பயிற்சியாளர் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய முதல் பிரிவு கடந்த 25ம் தேதி மும்பையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றனர்.

அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் நியூயார்க் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டிந்தது. இதையடுத்து தற்போது அவர்கள் நியூயார்க் சென்றடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்