அரையிறுதிக்கு கடும் போட்டி: இன்று நடைபெறும் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்

குரூப்1ல் உள்ள 4 அணிகளுக்கும் அரைஇறுதிக்கான கதவு திறந்து இருப்பதால் ரன்ரேட் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Update: 2024-06-23 23:37 GMT

செயின்ட் லூசியா,

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்8 சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. குரூப்1ல் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களது கடைசி லீக்கில் மோதுகின்றன. ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்த பிரிவு உயிரோட்டமாக மாறியிருக்கிறது. அதாவது 4 அணிகளுக்கும் அரைஇறுதிக்கான கதவு திறந்து இருப்பதால் ரன்ரேட் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

செயின்ட் லூசியாவில் இந்திய நேரப்படி இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதே பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- வங்காளதேசம் அணிகள் கிங்ஸ்டவுனில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி இரவில் தொடங்கினாலும் இந்திய நேரப்படி மறுநாள் (செவ்வாய்கிழமை) காலை 6 மணிக்கே தெரியும்.

இனி ஒவ்வொரு அணிக்கும் அரைஇறுதி வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.

இந்தியாவுக்கு...

தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன்ரேட்டிலும் திடமான நிலையில் (ரன்ரேட் +2.425) இருக்கிறது. கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவை தெறிக்கவிட்டால் சிக்கலின்றி கம்பீரமாக அரைஇறுதிக்குள் நுழையும். சறுக்கினாலும் கூட அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும். ஆனால் மிக மோசமாக தோற்று ரன்ரேட் குறைந்து விடக்கூடாது.

உதாரணமாக ஆஸ்திரேலியா 41 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி 83 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வென்றால் இந்தியாவின் ரன்ரேட் 3-வது இடத்துக்கு சரிந்து போட்டியை விட்டு வெளியேற நேரிடும்.

ஆஸ்திரேலியாவுக்கு...

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை இந்தியாவை கட்டாயம் ேதாற்கடித்தாக வேண்டும். அதே சமயம் ஆப்கானிஸ்தானை, வங்காளதேச அணி வீழ்த்த வேண்டும். இவ்வாறு நடந்தால் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் தலா 4 புள்ளிகளுடன் அரைஇறுதியை எட்டும். ரன்ரேட் பிரச்சினை எழாது.

ஆனால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானும் வாகை சூடினால் அப்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையை அடையும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும். எனவே ஆஸ்திரேலியா ரன்ரேட்டை மனதில் வைத்தே விளையாடும்.

ஆப்கானிஸ்தானுக்கு....

ஆஸ்திரேலியாவுக்கு 'ஆப்பு' வைத்ததன் மூலம் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கும் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர்8 சுற்றின் இறுதி லீக்கில் வங்காளதேசத்தை வென்றாக வேண்டும். அதே சமயம் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். இப்படி முடிவுகள் அமையும் போது இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் ரன்ரேட் தேவையின்றி முதல்முறையாக அரைஇறுதிக்குள் கால்பதிக்கும்.

மாறாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவை தோற்கடித்தால் ஆப்கானிஸ்தான் பெரிய வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வதைக்க வேண்டும். உதாரணமாக ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றால், ஆப்கானிஸ்தான் அணி குறைந்தது 36 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை முடக்கியாக வேண்டும்.

2-வது பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் கடைசி பந்தில் இலக்கை 'சேசிங்' செய்தால், ஆப்கானிஸ்தான், எதிரணி 160 ரன் எடுக்கும் போது அந்த இலக்கை 15.4 ஓவருக்குள் விரட்டிப்பிடிக்க வேண்டும். அப்போது தான் ரன்ரேட்டில் டாப்-2 இடத்திற்குள் வர முடியும்.

வங்காளதேசத்துக்கு....

முதல் இரு ஆட்டங்களில் தோற்றாலும் வங்காளதேசமும் வாய்ப்பில் லேசாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. அந்த அணிக்கு முதலில் இந்தியா, ஆஸ்திரேலியாவை பதம் பார்க்க வேண்டும். பிறகு வங்காளதேசம் மெகா ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை போட்டுத்தாக்க வேண்டும்.

தெளிவாக சொல்வது என்றால், இந்திய அணி 55 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் வங்காளதேசம் குறைந்தது 31 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை சாய்க்க வேண்டும். இவ்வாறு நிகழும் போது இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்கும். வங்காளதேசம், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் தலா 2 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் வங்காளதேசத்துக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்த இந்திய அணிக்கு, அதற்கு பழிதீர்க்க சரியான சந்தர்ப்பம் கனிந்துள்ளது. எனவே இந்திய வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக மல்லுக்கட்டுவார்கள் என்று நம்பலாம்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 19-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

இந்த போட்டியை மழை அச்சுறுத்துகிறது. ஆட்டத்தின் போது மழை பெய்வதற்கு 51 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: விராட் கோலி, ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.

Tags:    

மேலும் செய்திகள்