இந்தியா - இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி: சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படாதது ஏன்..?

இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சமனில் முடிவடைந்தது.

Update: 2024-08-03 11:16 GMT

கொழும்பு,

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சாரித் அசலங்கா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வெல்லாலகே 67 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா பந்துகளை எல்லைக்கோட்டுக்கு தெறிக்கவிட்டார். 33 பந்துகளில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். முக்கியமான தருணத்தில் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

பரபரப்பான சூழலில், அணியின் வெற்றிக்கு போராடிய ஷிவம் துபே, ஆட்டம் சமனில் இருந்தபோது ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசி விக்கெட்டுக்கு இறங்கிய அர்ஷ்தீப்சிங் முதல் பந்திலேயே விக்கெட்டாக, இந்த ஆட்டம் சமனில் முடிந்தது.

இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹசரங்கா, அசலங்கா தலா 3 விக்கெட்டும், வெல்லலகே 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் போட்டி முடிவடைந்த பின்னர் சூப்பர் ஓவர் வீசப்படாமல் இரு அணி வீரர்களும் கைகுலுக்கி விட்டு மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

இதன் காரணமாக ஏன் இந்த போட்டியில் சூப்பர் ஓவர் வீசப்படவில்லை? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்தது.

அதற்கான காரணம் பின்வருமாறு:-

அந்த வகையில், ஐ.சி.சி ஒருநாள் போட்டிகளுக்கென சில விதிமுறைகளை வைத்துள்ளது. அந்த வகையில் ஒருநாள் போட்டிகள் டை-யில் முடிவடையும்போது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் மட்டும் ஏன் சூப்பர் ஓவர் வீசப்படவில்லை என்றால் ஐசிசி விதிமுறைப்படி டி20 போட்டிகள் டை-யில் முடிந்தால் நிச்சயம் சூப்பர் ஓவர் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் 50 ஓவர் போட்டிகளுக்கு அப்படி ஒரு விதிமுறை கட்டாயம் கிடையாது.

அதேபோன்று ஒவ்வொரு தொடரை நடத்தும் இரு அணிகளை சேர்ந்த நிர்வாகங்களும் 50 ஓவர் போட்டிகளின் போது சூப்பர் ஓவரை வைக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடர் அறிவிக்கப்படும்போது அந்த விதிமுறைகளில் போட்டி சமநிலையில் முடிந்தால் டை என்றே அறிவிக்கப்படும் என்றும் சூப்பர் ஓவர் நடத்தப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாகவே இந்த போட்டியில் சூப்பர் ஓவர் வீசப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்