ஒருநாள் போட்டிகளில் அசத்தக்கூடிய நல்ல பேட்ஸ்மேனை இந்தியா கண்டறிந்துள்ளது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

ராஜ்கோட் நகரில் நடைபெற்ற 3-வது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

Update: 2024-02-19 16:23 GMT

மும்பை,

இங்கிலாந்துக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

அந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சர்பராஸ் கான் முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது அதிவேகமான அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற பாண்ட்யாவின் சாதனையை சமன் செய்தார்.

இருப்பினும் துரதிஷ்டவசமாக 62 ரன்களில் அவுட்டான அவர் 2-வது இன்னிங்சில் மீண்டும் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியின் 2 இன்னிங்சிலும் அரை சதங்கள் அடித்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தத் துவங்கியுள்ள சர்பராஸ் கான் ஒருநாள் போட்டிகளிலும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடும் திறமையை கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். எனவே அவருக்கு ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு;- "50 ஓவர் போட்டிகளில் மிடில் ஆர்டரில் அசத்தக்கூடிய நல்ல பேட்ஸ்மேனை இந்தியா கண்டறிந்துள்ளதாக நான் நினைக்கிறேன். குறிப்பாக போட்டியின் மிடில் ஸ்டேஜில் உள்வட்டத்திற்குள் 5 பீல்டர்கள் நிற்கும் போது சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர் சர்பாராஸ் கான்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்