இம்பேக்ட் வீரர் விதிமுறை நல்லதாகும்: ரவிசாஸ்திரி கருத்து

இம்பேக்ட் வீரர் விதிமுறையின் மூலம் போட்டி விறுவிறுப்பாக மாறி இருக்கிறது என்று ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-14 20:16 GMT

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இம்பேக்ட் வீரர் விதிமுறை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி போட்டியின் போது இரு அணிகளும் தங்களுக்கு தேவையான சமயத்தில் ஒரு வீரரை வெளியேற்றி விட்டு இம்பேக்ட் வீரரை களம் இறக்கலாம்.

இந்த விதிமுறையால் ஆல்-ரவுண்டர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஆகியோர் குறை கூறியிருந்தனர். ஆனால் இந்த விதியால் போட்டியில் விறுவிறுப்பு அதிகரித்து இருப்பதாக கங்குலி உள்பட முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி கூறுகையில், "இம்பேக்ட் வீரர் விதிமுறை நல்லதாகும். நீங்கள் காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும். மற்ற விளையாட்டுகளிலும் கூட பல மாறுதல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த விதிமுறையின் மூலம் போட்டி விறுவிறுப்பாக மாறி இருக்கிறது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரையும், நடப்பு தொடரையும் ஒப்பிட்டு பார்த்தால் தற்போது நிறைய ஆட்டங்களில் நெருக்கமான முடிவு வந்து இருப்பதை பார்க்கலாம். அத்துடன் இந்த விதியால் இந்திய வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. எப்போதும் புதிதாக ஒன்றை கொண்டு வந்தால் அது சரிப்பட்டு வராது என்று எதிர்க்க சிலர் இருப்பார்கள். போட்டி விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இம்பேக்ட் வீரர் விதிமுறையை தொடர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்