இம்பேக்ட் வீரர் விதிமுறை நிரந்தரமானது என்று சொல்லவில்லை - ஜெய் ஷா

இம்பேக்ட் வீரர் விதிமுறை நிரந்தரமானது என்று சொல்லவில்லை என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-10 22:16 GMT

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல்.16 சீசன்களை கடந்து தற்போது 17-வது சீசனாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மேலும் இந்த தொடரின் சுவாரஸ்யத்தை கூட்ட கடந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை கொண்டுவரப்பட்டது. அந்த விதிமுறையானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் தொடர்ந்து வரும் வேளையில் போட்டிகளின் முடிவு இம்பேக்ட் பிளேயர் மூலமாக தீர்மானமாகி வருகிறது.

இந்த இம்பேக்ட் பிளேயர் விதிமுறை மூலம் அணிகளுக்கு கூடுதல் சாதகமும் கிடைத்து வருகிறது. அதாவது வழக்கமாக பங்குபெறும் 11 வீரர்களை தவிர்த்து கூடுதலாக 5 வீரர்களை டாசின் போதே கேப்டன் இம்பேக்ட் பிளேயர் லிஸ்டில் அறிவிக்கலாம். அப்படி அறிவிக்கப்படும் அந்த ஐந்து பேர்களில் ஒருவர் பேட்ஸ்மேனாகவோ அல்லது பவுலராகவோ களமிறங்க முடியும். அப்படி இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் வீரர் பவுலராக இருந்தால் நான்கு ஓவர்களை வீசலாம். அதேபோன்று பேட்ஸ்மேனாக இருந்தால் முழுவதுமாக பேட்டிங் விளையாடலாம்.

இருப்பினும் இந்த இந்த விதிமுறையயில் தனக்கு அதிருப்தி இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய்ஷாவிடம் இம்பேக்ட் வீரர் விதிமுறை தொடருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் கூறுகையில், " ஐ.பி.எல். போட்டியில் இம்பேக்ட் வீரர் முறையை நாங்கள் மெதுவாகவே அமல்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டத்திலும் இரண்டு இந்திய வீரர்களுக்கு ஆடும் வாய்ப்பு கிட்டுவது மிகவும் முக்கியமானதாகும். இது நிரந்தரமானது என்று சொல்லவில்லை. வீரர்கள், அணி நிர்வாகம், ஒளிபரப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் கலந்து ஆலோசித்து இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும். இதனை வீரர்கள் சரியில்லை என்று நினைத்தால் இது குறித்து வீரர்களுடன் பேசுவோம். இதுவரை யாரும் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்