கனவில் கூட நான் வீழ்த்த விரும்பும் ஒரு அணி என்றால் அது பெங்களூருதான் - கம்பீர்
பெங்களூரு அணியை எப்போதும் தோற்கடிக்க வேண்டும் என்பதே தம்முடைய விருப்பம் என்று கம்பீர் கூறியுள்ளார்.
பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் அளித்த பேட்டியில், ஆர்.சி.பி. அணியை கனவில் கூட விடாமல் எப்போதும் தோற்கடிக்க வேண்டும் என்பதே தம்முடைய விருப்பம் என்று அதிரடியாக பேசியுள்ளார். அத்துடன் ஒரு கோப்பையை கூட வெல்லாத பெங்களூரு அணியினர் எப்போதுமே அனைத்தையும் வென்றதைப் போன்ற எண்ணத்தையும் அணுகு முறையையும் கொண்டிருப்பதாக கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஒவ்வொரு முறையும் நான் தோற்கடிக்க விரும்பும் அணி மற்றும் என்னுடைய கனவிலும் நான் வீழ்த்த விரும்பும் ஒரு அணி என்றால் அது பெங்களூருதான். பெங்களூரு கிறிஸ் கெய்ல், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோருடன் கூடிய வலுவான அணி. உண்மையாக அவர்கள் எதையும் வெல்லவில்லை. ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் வென்றதாக என்று நினைக்கிறார்கள். அந்த மாதிரியான அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதே சமயம் பெங்களூரு எப்போதும் வலுவான ஆக்ரோசமாக விளையாடக்கூடிய பேட்டிங் வரிசையை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம். விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் ஆகிய இவர்களை விட வேறு என்ன வேண்டும். எனது கெரியரில் நான் செய்ய விரும்பும் ஒன்று என்றால் அது மீண்டும் மைதானத்திற்கு சென்று பெங்களூருவை வீழ்த்த வேண்டும்" என்று கூறினார்.