விராட் கோலி இருந்திருந்தால்...முன்னாள் இங்.வீரர் அதிரடி கருத்து

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார்.

Update: 2024-01-30 10:56 GMT

image courtesy; PTI

லண்டன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடரில் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 2வது போட்டியிலிருந்து காயத்தால் விலகியுள்ளது பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இதற்கு முன்பாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியதும் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.

இந்நிலையில் முதல் போட்டியில் விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்ததாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளார். குறிப்பாக விராட் கோலி இருந்திருந்தால் ஆக்ரோஷமான வார்த்தைகளை சொல்லி ஸ்லெட்ஜிங் செய்து இங்கிலாந்தின் விக்கெட்டை எடுக்க முயற்சித்திருப்பார் என்று பனேசர் கூறியுள்ளார்.

மேலும் தற்போது விராட் கோலி இல்லாமல் 2-வது போட்டியில் வென்று காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ரோகித் தள்ளப்பட்டுள்ளதாக கூறும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;- "இங்கிலாந்து வீரர்கள் சுதந்திரமாக விளையாடுவதை இந்தியா நிறுத்த வேண்டும். ஒருவேளை விராட் கோலி இருந்திருந்தால் இந்த இங்கிலாந்து வீரர்களின் முகத்திற்கு நேராக சென்று மீண்டும் அடியுங்கள். நீங்கள் எந்தளவுக்கு தரமானவர் என்பதை பார்க்கலாம் என்று சொல்லியிருப்பார். இருப்பினும் தற்போதைய இங்கிலாந்து அணி தோற்பதற்கு பயப்படக்கூடியவர்கள் அல்ல.

எனவே அடுத்த 4 போட்டிகளிலும் இங்கிலாந்து வீரர்கள் பயமின்றி விளையாடுவார்கள். விராட் கோலி எப்போதும் போட்டிகளில் ஆர்வத்தை ஏற்படுத்துவார். அது தற்போதைய இந்திய அணியில் இல்லை. ஒருவேளை அடுத்த போட்டியில் இங்கிலாந்து வென்றால் இந்தியா மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளாகி விடும். எனவே விராட் கோலி இல்லாமல் அனைத்தையும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள ரோகித் சர்மா தற்போது பெரிய அழுத்தத்தில் இருக்கிறார்" என்று கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்