நான் ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய சிறப்பான பங்களிப்பை அளிக்கவே விரும்புகிறேன் - சாய் சுதர்சன்

குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்னும், சாய் சுதர்சன் 103 ரன்னும் எடுத்தனர்.

Update: 2024-05-11 05:53 GMT

Image Courtesy: X (Twitter)

அகமதாபாத்,

ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 231 ரன்கள் குவித்தது.

குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்னும், சாய் சுதர்சன் 103 ரன்னும் எடுத்தனர். சென்னை தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 232 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் குஜராத் அணி 35 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தின் இன்னிங்ஸ் இடைவேளையின் போது சதம் அடித்து அசத்திய சாய் சுதர்சன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, என்னுடைய கரியரில் இது ஒரு மிகச்சிறந்த இன்னிங்ஸ். திட்டங்களை நினைத்தப்படியே சரியாகச் செயல்படுத்தியதில் பெரும் மகிழ்ச்சி. இது பேட்டிங் ஆட சிறந்த பிட்ச்.

அதனால் இந்த பிட்ச்சில் எவ்வளவு ஸ்கோரை அடித்தால் போதும் என என்னால் சொல்ல முடியாது. வேரியேஷன்களை மாற்றி மாற்றி வீசி கொஞ்சம் ஒயிடாகவும் வீச முயல்வது பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பான ஆப்சனாக இருக்கும். ஆரம்பத்தில் பந்து கொஞ்சம் நின்றுதான் வந்தது. ஆனால், நேரம் செல்ல செல்ல நன்றாக பிட்ச் பேட்டிங்கிற்கு உகந்ததாக மாறியது.

சுப்மன் கில் ஆட்டத்தை நான் மறுமுனையில் இருந்து பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். சென்னைக்கு எதிராக கூடுதல் சிறப்பாக ஆடுவதாகக் கேட்கிறீர்கள், ஆனால், அது அப்படியில்லை. நான் ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய சிறப்பான பங்களிப்பை அளிக்கவே விரும்புகிறேன். எனக்கு இது ஒரு ஸ்பெஷலான இன்னிங்ஸ். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்