அதனை மறக்க நினைக்கிறேன்... ஆனால்.. - டி20 உலகக்கோப்பை தோல்வி குறித்து ஸ்டப்ஸ்

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது.

Update: 2024-08-23 16:07 GMT

image courtesy: PTI

கேப்டவுன்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

அதன்படி நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது. இதில் இந்தியா நிர்ணயித்த 177 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. அப்போது அந்த அணிக்கு 24 பந்தில் 26 ரன் மட்டுமே தேவையாக இருந்தது.

ஆனால் ஹென்ரிச் கிளாசெனின் (5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 52 ரன்) விக்கெட்டை பாண்ட்யா கழற்றியது, 18-வது ஓவரில் பும்ரா ஒரு விக்கெட் எடுத்து 2 ரன் மட்டுமே வழங்கி மிரட்டியது, இறுதி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் (21 ரன்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே மிக லாகவமாக சூர்யகுமார் பிடித்தது இப்படி திக்...திக்...திக் திருப்பங்களுடன் ஆட்டமும் இந்தியா பக்கம் சாய்ந்தது. 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்கு 169 ரன்னில் அடங்கி கோப்பையை கோட்டை விட்டது. சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த கேட்ச் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் வெற்றிக்கு மிக அருகே சென்று பின் தோல்வி அடைந்ததை மறக்க நினைத்தாலும் பலரும் இறுதிப்போட்டி முடிவு குறித்து தங்களிடம் பேசி அதை மீண்டும் நினைவுபடுத்துவதாக தென் ஆப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி முடிவை பற்றி நாம் எப்போது நினைக்க வேண்டாம் என்று நினைக்கிறோமோ, அப்போது அதைப்பற்றி பேசுகிறார்கள். என்னால் முடிந்தவரை அதை மறப்பதற்கு நினைக்கிறேன். ஆனால், அது அத்தனை எளிதாக இல்லை. ஒரு நாள் இரவு, யாரோ ஒருவர் அதைப் பற்றி என்னிடம் பேசினார். நீங்கள் எங்களுக்காக வருத்தம் அடைந்தால், அதை எங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதுபோல இருந்தது. சில விஷயங்களை நாம் நினைத்துப் பார்க்காமல் இருக்கவே விரும்புவோம்" என்றார்

Tags:    

மேலும் செய்திகள்