ரோகித் விக்கெட்டை நான் ஒரு முறை கூட வீழ்த்தியது கிடையாது அதனால்... - வருண் சக்ரவர்த்தி

இந்த ஆடுகளம் ஆரம்பத்தில் பேட்டிங் செய்த சாதகமாக தட்டையாக இருந்தது என வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

Update: 2024-05-12 03:33 GMT

Image Courtesy: AFP

கொல்கத்தா,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் மழை பெய்ததால் இந்த ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் சால்வா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்று நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 40 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களில் 17 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் வருண் சக்ரவர்த்தி அளித்த பேட்டியில் கூறியதாவது, ரோகித் விக்கெட்டை நான் ஒரு முறை கூட வீழ்த்தியது கிடையாது. அதனால் இந்த முறை அவருக்கான என்னுடைய திட்டம் மிகவும் தெளிவாக இருந்தது.

அவரைப் பந்தில் லைனுக்கு நேராக அடிக்க வைக்கக் கூடாது, அவரை அக்ராஸ் அடுக்க வைக்க வேண்டும் என திட்டம் தீட்டினேன். அதன்படியே நடந்தது. அதனால்தான் அப்படி ஆரவாரத்துடன் கொண்டாடினேன். நானும் நரேனும் திட்டங்கள் ரீதியாக ஒரே மாதிரியானவர்கள். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக இருவரும் வித்தியாசமானவர்கள்.

நாங்கள் பொதுவாக திட்டங்கள் குறித்து இருவரும் பேசிக் கொள்வோம். இந்த ஆடுகளம் ஆரம்பத்தில் பேட்டிங் செய்த சாதகமாக தட்டையாக இருந்தது. மேலும் நான் எப்பொழுதும் பந்து வீசியது போலத்தான் பந்து வீசுகிறேன். அதற்கான பலன்கள் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்